This is the platform share our thoughts, information and explore knowledge

Ads Here

Saturday, 21 October 2017

child story

சித்திரக் கதை : வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை
அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள்.

அந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய அழகான இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு பறந்தது.

திடீரென்று நிழல் படிவதையும் வேகமாகக் காற்று வீசுவதையும் கண்ட எறும்புகள் என்னவோ ஏதோவென்று நிமிர்ந்து பார்த்தன.

“அட! வண்ணத்துப்பூச்சியா? நான் ஏதோ பெரிய கழுகு என்றல்லவா பயந்தேன்” என்றது ஒரு சிற்றெறும்பு.

“யாராக இருந்தால் நமக்கென்ன? ஏன் பயப்படணும்? நமக்கு நிறைய வேலை இருக்கு. வண்ணத்துப்பூச்சி கிட்ட அரட்டையடிக்க நேரமில்லை?” என்றது மற்றோர் எறும்பு.

எறும்புகள் தன்னைக் கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கியிருந்ததைக் கண்ட வண்ணத்துப்பூச்சிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இந்த எறும்புகளுக்குத் தான் யார் என்று காட்ட வேண்டும் என்று நினைத்தது. இன்னும் கொஞ்சம் வேகமாகத் தனது இறக்கைகளை அசைத்தபடி எறும்புக் கூட்டத்துக்கு வெகு அருகில் சென்றது.

சாதாரணமாகக் காற்றடித்தாலே எறும்புகள் பறந்துவிடக்கூடியவை. வண்ணத்துப்பூச்சியின் வேகமான சிறகசைப்பு, எறும்புகளுக்குப் புயல் காற்றைப் போலிருந்தது.

எறும்புகள் நிலை தடுமாறின. கையிலிருந்த உணவுப் பொருட்களைக் கைவிட்டன. வரிசை கலைந்தது. பறந்து போய் விழுந்ததில் பல எறும்புகளுக்குக் காயம் ஏற்பட்டன.

சில எறும்புகள் வேகமாகச் சென்று ராணி எறும்பிடம் முறையிட்டன.

ராணி எறும்பு வண்ணத்துப்பூச்சிக்கு அருகில் வந்தது.




“அழகான வண்ணத்துப்பூச்சியே, எங்களை வேலை செய்யவிடாமல் ஏன் தொந்தரவு செய்கிறாய்? இது சரியில்லையே” என்று அமைதியாகவும் அன்பாகவும் சொன்னது.

“ஏய்! அற்ப எறும்பே! எனக்கு வேறு வேலை இல்லையா? நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று கிண்டலாகச் சிரித்தது வண்ணத்துப்பூச்சி.

“ நீ அருகில் வந்து வேகமாக உன் இறக்கைகளை அசைப்பதால் எங்களால் சரியாக நடக்க முடியவில்லை. பலருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் நீ சற்றுத் தள்ளி உன் விருப்பம் போல வேகமாகப் பறந்து செல்லலாமே” என்றது ராணி எறும்பு.

“என்னது! எனக்கு நீ ஆணையிடுகிறாயா? அதெல்லாம் உன் கூட்டத்தோடு வைத்துக்கொள். நான் சுதந்திரமானவன். இங்கேதான் பறப்பேன். உன்னால் முடிந்ததைச் செய்” என்றது வண்ணத்துப்பூச்சி.

தன் கூட்டத்தைப் பார்த்து, “நண்பர்களே! எல்லோரும் புற்றுக்குள் வாருங்கள். சற்று ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு நம் வேலையைத் தொடங்கலாம்” என்றது ராணி எறும்பு.

எறும்புகள் அனைத்தும் புற்றுக்குள் சென்றன.

“பயந்துகொண்டு ஓடிவிட்டன. எனக்கே வெற்றி” என்று சத்தமாகக் கூறிக் கொண்டே இன்னும் வேகமாகப் பறந்து சென்றது வண்ணத்துப்பூச்சி.

அப்போது இரையைக் குறிபார்த்து வேகமாக வந்துகொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று, வண்ணத்துப் பூச்சி மீது மோதிவிட்டது.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் வண்ணத்துப்பூச்சி தன் இறக்கைகளை இழந்து, பொத்தென்று எறும்புப் புற்றுக்கு அருகில் விழுந்தது.

வலியுடன் வண்ணத்துப்பூச்சி பறக்க முயன்றது. ஆனால், பறக்க முடியவில்லை. தொடர் முயற்சியால் சோர்வுற்றது. பாதி மயங்கிய நிலையில் அப்படியே வெயிலில் கிடந்தது.

சிறிது நேரம் கழித்து ராணி எறும்பு தனது ஒற்றர் எறும்பிடம் மேற்பரப்பின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரச் சொன்னது.

மேலே வந்த எறும்பு, சுற்றும் முற்றும் பார்த்தது. அங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டது. அருகில் சென்று பார்த்தது. நிலைமையை உணர்ந்தது. உடனே தகவல் கூற புற்றுக்குள் விரைந்தது.

“ராணியே! நம்மை பயமுறுத்திய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உடைந்து தனியே விழுந்துகிடக்கின்றன. அதுவும் மயங்கிய நிலையில் இருக்கிறது” என்றது உளவு பார்த்த எறும்பு.

“ஐயையோ… என் மனம் வேதனை அடைகிறது. வாருங்கள், நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்று நண்பர்களை அழைத்தது ராணி எறும்பு.

எறும்புகள் விரைந்தன.

“ஏதாவது செய்து அந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுங்கள்” என்று ஆணையிட்டது ராணி எறும்பு.

எறும்புகள் உதவிச் செய்யத் துடிப்பதைக் கண்ட வண்ணத்துப்பூச்சி, தான் செய்த செயலுக்கு வருந்தியது.

“எறும்புகளே, நான் உங்களைத் துன்புறுத்தினேன். ஆனாலும் என்னைக் காப்பாற்றத் துடிக்கிறீர்கள். என் தவறை உணர்ந்துவிட்டேன். நம்மைப் போன்ற பூச்சி இனங்கள் இறந்துவிட்டால் நீங்கள்தான் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்றது வண்ணத்துப்பூச்சி.

“அப்படியே ஆகட்டும்” என்றது ராணி எறும்பு.

அன்றிலிருந்து சகப் பூச்சிகள் இறந்தால் எறும்புகள் எல்லாம் சேர்ந்து, தூக்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

No comments:

Post a Comment

visiblity test

Digital Marketing Earning - Traffic / டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வருமானம்

 Digital Marketing Earning - Traffic / டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வருமானம்   Digital Marketing Traffic Methods : 1. Organic method     Direct...